ஒடிஷாவில் வங்க தேசத்தவர் கண்டறியும் பணி மும்முரம்

புவனேஸ்வர் : ஒடிஷாவில் சட்ட விரோதமாக குடியேறி, பல வேலைகளில் ஈடுபட்டுள்ள வங்க தேசத்தவர்களை கண்டறிந்து, அவர்களை திருப்பி அனுப்பும் பணியில் அம்மாநில போலீசார் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.

நம் நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தைச் சேர்ந்தவர்களை கண்டுபிடித்து, அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்பும் பணியில் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஒடிஷா மாநிலத்தில் பல்வேறு தொழில்களில் வங்க தேசத்தவர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக கட்டுமான தொழில்களில் வங்க தேசத்தவர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்காக மாநிலத்தின் பல இன்ஜினியரிங் நிறுவனங்களுடன் பேசி, வங்க தேசத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.

ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோர ஆறு மாவட்டங்கள் வாயிலாக வங்கதேசத்தவர், ஒடிஷாவிற்குள் ஊடுருவியிருக்கலாம் என கருதப்படுகிறது.

அந்த பகுதிகளில் கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒடிஷா மாநில சட்ட அமைச்சர் பிருத்விராஜ் ஹரிச்சந்திரன் கூறும்போது, ''சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்கதேசத்தவரை கண்டறியும் பணி துரிதமாக நடந்து வருகிறது,'' என்றார்.

இதையடுத்து, அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, ஒடிஷாவில் வங்கதேசத்தவர் வேட்டையை அம்மாநில அரசு துவக்கியுள்ளது.

Advertisement