ஆபரேஷன் சிந்தூர் : இந்தியாவுக்கு ஜெர்மனி ஆதரவு

1


பெர்லின்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜெர்மனி, பயங்கரவாதத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு என தெரிவித்து உள்ளது.

ஜெர்மனி சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வடேபுல்லை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் கூறியதாவது: கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரில் நடந்த கொடூர தாக்குதல் சம்பவம் கவலை அளிக்கிறது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்.

பயங்கரவாதத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு. ராணுவ தாக்குதலுக்கு பிறகு, போர் நிறுத்தம் அமலில் இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம்.

போர் நிறுத்தம் நிலையாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நமது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: பாகிஸ்தானுடனான பிரச்னையை இந்தியா கையாளும். இது குறித்து எந்த குழப்பமும் வேண்டாம். பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக் கொள்ளாது. இந்தியாவை அணு ஆயுதம் கொண்டு மிரட்ட முடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது என்ற ஜெர்மனியின் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement