கோடையிலும் வற்றாத பெண்ணையாறால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் கோடையிலும் வற்றாமல் தண்ணீர் செல்வதால் இரு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கர்நாடக மாநிலம், நந்தி துர்கா மலையில் தென்பெண்ணை ஆறு உருவெடுக்கிறது. முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்திற்கு, முன்பாக தமிழக எல்லையில் அணைக்கட்டு ஏதும் இல்லாததால், 'வெண்ணை உருகும் முன்னே, பெண்ணை பெருகும்' என்ற பழமொழிக்கு ஏற்ப காட்டாற்று வெள்ளம் ஆண்டு முழுதும் கரைபுரண்டு ஓடும்.

இதையடுத்து கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி, சாத்தனுார் அணைகள் கட்டிய பிறகும் அனைத்து பருவ காலங்களிலும் ஊற்று நீர், 320 கி.மீ., பயணித்து கடலுாரில் கடலில் கலக்கும்.

மலை, குன்று உள்ளிட்டவைகள் வழியாக பாய்ந்தோடி வரும் நதி, கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் இருந்து தான் மணல் மிகுந்த பரப்பில் பயணிக்கிறது.

இந்த மணலை கொள்ளையர்கள், கடந்த 20 ஆண்டுகளாக சுரண்டியதுடன், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தின், 70 சதவீத குடிநீர் தேவைக்காக, ஆற்றில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணர் உறிஞ்சப்படுகிறது.

இதன் பலனாக ஆற்றில் பருவமழை காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே தண்ணீரை பார்க்கும் நிலை இருந்தது.

ஆனால், இந்தாண்டு கோடை வெப்பத்தை குளிர்விக்கும் வகையில் ஆற்றில் தொடர்ச்சியாக தண்ணீர் சென்று கொண்டிருப்பது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தொடர் நீரோட்டம்



குறிப்பாக கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக தென்பெண்ணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சாத்தனுார் அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கீழ் பகுதியில் பெய்த மழையின் காரணமாக திருக்கோவிலுார் அணைக்கட்டுக்கு நேற்று, 600 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதனை மலட்டாறு, ராகவன் வாய்க்கால், சித்தலிங்கமடம் வாய்க்கால் என பிரித்து விடப்பட்டது போக எஞ்சிய 300 கன அடி நீர் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தென்பெண்ணையில், 7 மாதங்களைக் கடந்தும் தொடர்ச்சியாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், தென்பெண்ணையை ஒட்டியுள்ள விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு என முப்போக சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.

இது மட்டுமல்லாது நிலத்தடி நீர் உயர்ந்து கோடையிலும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு



இந்நிலையில், சாத்தனுார் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4,850 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் மொத்த கொள்ளளவான 7,321 மில்லியன் கன அடியில் (119 அடி) 3,475 மில்லியன் கன அடி (98.05 அடி) நீர் இருப்பு உள்ளது.

இதனால், சாகுபடிக்கு மட்டுமின்றி, கோடையில் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு ஏற்படும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகள் நிரம்பி விட்டதால், விரைவில் சாத்தனுார் அணையும் நிரம்பும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் மூலம் பழமொழியை மெய்ப்பிக்கும் விதமாக, தென்பெண்ணை வற்றாமல் பாய்ந்து ஓடிய பெருமைமிகு ஆண்டாக இது அமையும்.

Advertisement