திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் சாலையோர தரைக்கிணற்றால் அபாயம் வாகன ஓட்டிகள் திக். திக்..

திண்டிவனம்: திண்டிவனம்-சென்னை சாலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் சாலையோர தரை கிணற்றால் விபத்து ஏற்படுவதற்கு முன்பு தடுப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் - சென்னை சாலை, ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் உயர்மட்ட மேம்பாலம் பணி நடக்கிறது. இதற்காக, ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் உள்ள சர்வீஸ் சாலையில், அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலையொட்டிய நில பகுதியில் திறந்தவெளி தரைக்கிணறு உள்ளது.
நீர் நிரம்பியுள்ள தரைக்கிணறு சுற்றி தடுப்பு வேலி இல்லை. சர்வீஸ் சாலையில் செல்லும் பஸ், லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தரைக்கிணறு பகுதியை திக். திக். பயத்துடனே கடந்து செல்கிறது. இரவு நேரத்தில் வாகன விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு சாத்தான்குளம் மீரான்குளம் பகுதியில் சாலையோர கிணற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். இதனால், தமிழக தலைமை செயலர், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தரைக் கிணறுகளை அடையாளம் கண்டு, கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க உத்தரவிட்டார்.
அரசு உத்தரவிட்டும், திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் சாலையோர தரைக்க்கிணறு சுற்றி எந்தவித தடுப்பு வேலியும் அமைக்கப்படவில்லை. பெரிய விபத்து ஏற்படுவற்கு முன், நெடுஞ்சாலைத்துறையினர் தரை கிணற்றை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.