கோவில் முன் இப்படி செய்யலாமா? அறநிலையத்துறையில் பா.ஜ., மனு

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் முன், பக்தர்களை முகம் சுளிக்க வைக்கும் ஆட்களை அப்புறப்படுத்த, பா.ஜ., வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி, நல்லுார் மண்டல பா.ஜ., தலைவர் மந்திராசலமூர்த்தி மற்றும் கட்சியினர், அறநிலையத்துறை துணை கமிஷனர் வர்ஷினியிடம் அளித்த மனு விவரம்:

திருப்பூர் நகரின் அடையாளமான ஆன்மிக தலமாக விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகின்றனர். திருமணம் போன்ற சுப விசேஷங்களும் நடக்கிறது. இக்கோவில் வளாகத்தின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் சில நபர்கள் போதை வஸ்துகளைப் பயன்படுத்தி விட்டு வந்து விழுந்து கிடப்பது வாடிக்கையாக உள்ளது.

சிலர் ஆபாசமான நிலையில் கோவில் வாசலில் படுத்து உருளுகின்றனர். சில சமயங்களில் போதை ஆசாமிகள் தங்களுக்குள் கடுமையாகவும், அநாகரிகமாகவும் வாக்குவாதம் செய்கின்றனர். இங்கு நிறுத்தப்படும் வாகனங்கள் திருடு போவதும் நடக்கிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள்; அருகேயுள்ள பெண்கள் பள்ளிக்குச் செல்லும் மாணவியர் இது போன்ற செயல் களால் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இந்நிலை தொடராத வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும், போதை ஆசாமிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து கட்டுப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement