தோனி முடிவு என்ன... * சென்னைக்கு கடைசி போட்டி

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் இன்று நடக்கும் பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, குஜராத் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி 13 போட்டியில் 3 ல் மட்டும் வென்று (10 தோல்வி) புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று தனது கடைசி போட்டியில், சிறப்பான வெற்றி பெறும் பட்சத்தில் 9வது இடத்துக்கு முன்னேறலாம்.
கேப்டன் தோனி, ஜடேஜா, ஷிவம் துபே என சீனியர் வீரர்கள் பலரும் ரன் சேர்க்க திணறுகின்றனர். ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், பிரவிஸ் என இளம் வீரர்கள் இன்று எழுச்சி பெற்றால் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யலாம்.
பவுலிங்கில் நுார் அகமது (21 விக்.,) தவிர கலீல் அகமது (14), பதிரானா (12), ஜடேஜா (8), அஷ்வின் (7) என யாரும் கைகொடுக்காது பலவீனம்.
சென்னை அணி கேப்டன் தோனி 43, கடந்த 2020ல் சர்வதேச அரங்கில் இருந்து விடைபெற்றார். நடப்பு பிரிமியர் தொடரில் (13ல் 196 ரன்) திணறுகிறார். இதனால் இன்றைய போட்டியுடன் பிரிமியர் அரங்கில் இருந்து விடைபெறுவாரா அல்லது அடுத்த ஆண்டும் தொடர்வாரா என்பது தோனிக்கு மட்டுமே தெரியும்.
முதலிடம் பெறுமா
குஜராத் (13ல் 9 வெற்றி, 4 தோல்வி) இன்று வென்றால் 20 புள்ளியுடன் பட்டியலில் 'டாப்-2' இடம் பிடிக்கலாம். டெஸ்ட் அணி கேப்டனான உற்சாகத்தில் உள்ள சுப்மன் கில் (636 ரன்), இத்தொடரில் அதிக ரன் குவித்த சாய் சுதர்சன் (638), அனுபவ பட்லர் (533) ரன் சேர்க்க உள்ளனர்.
மற்றபடி 'டாப்-3' பேட்டர்களை தவிர வேறு யாரும் சோபிக்காதது சிக்கல் தரலாம். பவுலிங்கில் பிரசித் கிருஷ்ணா (21), சாய் கிஷோர் (16), சிராஜ் (15) உதவுகின்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் (13ல் 8 விக்.,) சிறப்பாக செயல்பட்டால் நல்லது.