இந்தியாவுக்கு 2 வெண்கலம் * உலக துப்பாக்கிசுடுதலில்...

சஹ்ல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நரேன் பிரனவ், 632.1 புள்ளியுடன் முதலிடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அபிஷேக் (626.6, 12வது இடம்), ஹிமான்சு (625.8, 17) ஏமாற்றினர்.
பின் நடந்த பைனலில் நரேன் பிரனவ், துவக்கத்தில் இருந்து பின் தங்கினார். முடிவில் 227.9 புள்ளியுடன் மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 25 மீ., ரேபிட் பயர் பிஸ்டல் பைனல் நடந்தது. இந்தியாவின் முகேஷ், 22 புள்ளியுடன் வெண்கல பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் போட்டியில் இந்தியாவின் ஓஜஸ்வி (633.2), ஷாம்பவி (633.1) முதல் இரு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.
இதுவரை இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கத்துடன், பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2 தங்கம், ஒரு வெண்கலம் வென்ற சீனா, முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் (2 தங்கம்) 2வது இடம் பிடித்தது.

Advertisement