ரூ.1.52 கோடி மதிப்பில் சடலம் எரியூட்டு மையம்

குன்னத்துார், : குன்னத்துார் பேரூராட்சி பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதியில் இறந்தவர்களை எரியூட்ட மயான வசதி இல்லை. இறந்தவர்களை எரியூட்ட பெருந்துறை அல்லது திருப்பூர் செல்ல வேண்டி உள்ளது. இது வெகு துாரம் என்பதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

குன்னத்துாரில் எரியூட்டும் மையம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எரியூட்டும் மயானம் அமைக்க அரசு ஒரு கோடியே, 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குன்னத்துார், ஆதியூர் பிரிவு செல்லும் பகுதியில் உள்ள மயானத்தில் எரியூட்டும் மையம் கட்டும் பணி ஜரூராக நடந்து வருகிறது. இது காஸ் மூலம் எரியூட்டப்படும் மையம். ஓராண்டில் பணி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், பணி முடிந்ததும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement