பயங்கரவாதத்தால் இந்தியாவை ஒடுக்க முடியாது: காங்., எம்.பி., சசி தரூர்

புதுடில்லி: பயங்கரவாதத்தால் எங்களை ஒடுக்க முடியாது என்று பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு விவரிக்கும் பயணத்தை தொடங்கும் முன்பு காங்கிரஸ் எம்.பி.,சசி தரூர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு செயல்பாடுகளை, பல்வேறு நாடுகளுக்கும் நேரில் சென்று விரிவாக விவரிப்பதற்காக, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் அடங்கிய ஏழு குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காங்கிரஸ் கட்சி பரிந்துரைத்த பட்டியலில் இல்லாத, மூத்த எம்.பி., சசி தரூரின் பெயரை மத்திய அரசு சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், சசி தரூர் தலைமையிலான குழுவினர் 5 நாடுகளுக்குச் சென்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கின்றனர். இதற்காக, நேற்றிரவு அவர்கள் டில்லியில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, சசி தரூர் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவுக்கு கிளம்பி விட்டேன். நாட்டுக்காக பேச இருக்கிறோம்.
நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்க உள்ளோம்.
பயங்கரவாதத்தால் எங்களை ஒடுக்க முடியாது. உண்மையின் வெற்றியை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. அமைதி மற்றும் நம்பிக்கையூட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் இந்த செயல் ஒருநாள் உலகிற்கு புரிய வரும், ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறினார்.


