கடலுக்குள் பிறந்த நாள் கொண்டாடிய சிறுமி

சென்னை : நீலாங்கரையை சேர்ந்தவர் அரவிந்த், 43. ஆழ்கடல் பயிற்சியாளர். கடல் வளத்தை பாதுகாக்க, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

இவரின் குழுவினர், நீலாங்கரையில் இருந்து, 6 கி.மீ., கடல் துாரத்தில், 60 அடி ஆழத்தில், யோகா, சைக்கிள் ஓட்டுவது, செஸ், கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடியை பறக்க விட்டது, திருமணம் நடத்தி வைத்தது என, பல சாதனைகள் படைத்தனர்.

அரவிந்தின் மகள் தாரகை ஆராதனா, 11. தந்தைக்கு நிகராக, 6 வயது முதல் ஆழ்கடலில் பல சாதனைகள் நிகழ்த்தி வருகிறார்.

இவரின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள பாடி என்ற டைவிங் பயிற்றுநர்களின் தொழில்முறை சங்கம் சார்பில், ‛ஜூனியர் ஓபன் வாட்டர் ஸ்கூபா டைவர்' என்ற உரிமம் வழங்கியது.

இந்நிலையில், தாரகை ஆராதனா மற்றும் உறவினர் நிஸ்விக், 9, ஆகியோரின் பிறந்த நாளை, கடலுக்குள் கொண்டாட முடிவு செய்தனர்.

நேற்று, 500 மீட்டர் கடல் துாரத்தில், 15 அடி ஆழத்தில், சுவாச கருவிகள் அணிந்து சென்று பிறந்த நாள் கொண்டாடினர்.

இவர்கள் பயன்படுத்திய கேக், மீன்கள் சாப்பிடும் வகையில், கடல் பாசியை அரைத்து தனித்துவமாக செய்யப்பட்டது.

பாதுகாப்புக்காக நான்கு பேர் உடன் சென்றனர். துணியில் வாழ்த்து பேனர் வைத்து, கேக்கை இரண்டு பேரும் வெட்டினர்.

உடனே, மீன்கள் சூழ்ந்து, கடல்பாசி கேக்கை உண்டன. இந்த நிகழ்வு, 20 நிமிடம் கடலுக்குள் நிகழ்ந்தது.

Advertisement