ஓசூர் மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஐ.என்.டி.யு.சி., தீர்மானம்
ஓசூர் :ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சீர்கேட்டை கண்டித்து, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என, ஐ.என்.டி.யு.சி., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கே.ஏ.பி., திருமண மண்டபத்தில், ஐ.என்.டி.யு.சி., மற்றும் அதன் இணைப்பு சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் முனிராஜ், செயலாளர் பரமானந்த பிரசாத் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஜெகன்நாதன், டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவர் குப்புசாமி ஆகியோர், ஆலோசனை வழங்கி பேசினர்.
கூட்டத்தில், ஓசூரில் திறக்கப்பட்டுள்ள தோழி விடுதி போன்று, ஆண் தொழிலாளர்களுக்கும் விடுதிகள் கட்டி தர வேண்டும். இதற்கு, தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர்., நிதியை பயன்படுத்த வேண்டும். ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. எனவே, மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. தமிழக அரசு, இப்பகுதிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தாலும், எவ்வித செயல்பாடுகளும் இல்லை.
அதிகாரிகளை வேலை வாங்க முடியாத திராணியில்லாத நிர்வாகம் உள்ளது. எனவே, அதிகாரிகளை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால், தொழிலாளர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.என்.டி.யு.சி., மூத்த நிர்வாகிகள் களஞ்சியம், பெருமாள், மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், காங்., மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.