நடைபாதை வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி துணை முதல்வர் சிவகுமார் அறிவிப்பு

பெங்களூரு: ''பெங்களூரில் நடைபாதை கடைகள் அகற்றப்படும். நடைபாதைகளில் கடை வைக்க, 27,665 தெரு வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தள்ளுவண்டி கொடுக்கப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று பெங்களூரில் சுரங்கப்பாதை அமைப்பது, மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணை அருகில் காவிரி ஆரத்தி நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் துணை முதல்வர் சிவகுமாருடன் ஆலோசனை நடத்தினார்.
கார்ப்பரேஷன் பிரிப்பு
கூட்டத்துக்கு பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு மாநகராட்சி, பெருநகர பெங்களூரு ஆணையமாக மே 15ம் தேதி மாற்றப்பட்டது. 120 நாட்களுக்குள் கார்ப்பரேஷன் அமைக்க வேண்டும். இது தொடர்பாக, அனைத்து எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகள் கேட்கப்படும்; இறுதியில் அமைச்சரவையில் விவாதித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.
மழை பாதிப்பு பகுதியின் எம்.எல்.ஏ.,க்களுக்கு, தேவையான பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்படும்.
பெங்களூரில் நடைபாதை கடைகள் அகற்றப்படும். நடைபாதைகளில் கடை வைக்க, 27,665 தெரு வியாபாரிகள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தள்ளுவண்டி கொடுக்கப்படும்.
சாலை அகலப்படுத்தும் பகுதிகளில், சொத்து உரிமையாளர்களுக்கு 'டி.டி.ஆர்., எனும் மாற்றத்தக்க மேம்பாட்டு உரிமைகள்' வழங்கப்படும். இது குறித்து அவர்களுடன் எம்.எல்.ஏ.,க்கள் பேச்சு நடத்த வேண்டும்.
300 கி.மீ., சாலை
மழைநீர் கால்வாயையொட்டி, 300 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கப்படும். வரும் நாட்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகள், அபார்ட்மென்ட்களின் அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம் கட்ட அனுமதியில்லை.
நகரில் 25 லட்சம் சொத்துகள் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. இதில், ஐந்து லட்சம் சொத்துகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளது. வரி, சொத்து பதிவில் வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும்.
கெம்பே கவுடா லே - அவுட்டில் 'ஸ்கை டெக்' கட்டப்படும். மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வரும் பிரதான சாலையுடன், சர்வீஸ் சாலை இணைக்கப்படும். இதனால் வாகன போக்குவரத்து சீராக இருக்கும்.
சுரங்கப்பாதை
சுரங்கப்பாதை நுழைவு வாயில், வெளியேறும் வாயிலில் போக்குவரத்து நெரிசல், விதான் சவுதாவை சுற்றிலும் ஒரு கி.மீ., சுற்றளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது.
இது தொடர்பாக மாநில தலைமை செயலர், பெருநகர பெங்களூரு ஆணைய முதன்மை நிர்வாக அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து உள்ளனர். 114 கி.மீ.,க்கு 'எலிவேட்டட் காரிடார்' அமைக்கப்படும்.
குப்பை பிரச்னையை போக்க, 4,000 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. நகரில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு 33 பேக்கேஜ் டெண்டர் கோரப்படும். டெண்டர் கோருவோர், ஏழு ஆண்டுகள் பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.