பவுஞ்சூரில் உழவர் சந்தை விவசாயிகள் வலியுறுத்தல்

பவுஞ்சூர்:பவுஞ்சூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூரில் அனைத்து வாரங்களிலும் புதன் கிழமையன்று, அரசு கால்நடை மருத்துவமனை அருகே வாரச்சந்தை நடப்பது வழக்கம்.

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் மீன், கருவாடு போன்றவற்றை இங்கு விற்பனை செய்து வருகின்றனர்.

விதைகள், நாற்று வகைகள் உள்ளிட்டவற்றையும் விற்பனை செய்கின்றனர்.

ஒரு சில வியாபாரிகள், கோயம்பேடு காய்கறி சந்தையில் இருந்து மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி வந்து, சந்தையில் சில்லறை விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கட்டட வசதி இல்லாமல் திறந்தவெளியில் சந்தை நடப்பதால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி, வியாபாரிகள் காய்கறிகளை பாதுகாக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும், போதிய இடவசதி இல்லாததால் வியாபாரிகள், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் கடைகள் அமைப்பதால், மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பவுஞ்சூரில் உழவர் சந்தைக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சந்தை வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement