புடின் ஹெலிகாப்டரை குறி வைத்த உக்ரைன் ட்ரோன்: நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்

2

மாஸ்கோ; உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் நூலிழையில் உயிர் தப்பினார்.



உக்ரைன், ரஷ்யா இடையே போர் மூண்டு இன்றுடன் 1186வது நாளை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகி உள்ளனர்.


அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்தும் பலன் இல்லை. பேச்சுவார்த்தை தோல்வி, போர் நீடிப்பு என நிலைமைகள் இருக்க, இன்று உக்ரைன் மீது ரஷ்யா அதிரடியாக தாக்குதல் நடத்தி இருக்கிறது.


கிட்டத்தட்ட 266 ட்ரோன்கள், 45 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உக்ரைனை நிலைகுலைய வைத்தது. இந் நிலையில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் இருந்து ரஷ்ய அதிபர் புடின் உயிர் தப்பிய விவரம் தற்போது வெளியாகி உள்ளது.


இந்த சம்பவம் மே 20ம் தேதி நடந்துள்ளது. குர்ஸ்க் பகுதிக்கு அதிபர் புடின் ஹெலிகாப்டரில் சென்று கொண்டு இருந்த போது, அதன் பாதையை நோக்கி ட்ரோன் ஒன்று வருவது கண்டறியப்பட்டது. அதனை இடைமறித்து ரஷ்ய வான் பாதுகாப்புப் படை அழித்தது. இதன் மூலம் ஹெலிகாப்டரில் இருந்த அதிபர் புடின் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.


இதை வெளியிட்டுள்ள பாதுகாப்புத்துறையின் மூத்த அதிகாரிகள், குர்ஸ்க் வான்வெளியில் உக்ரைன் ட்ரோன்கள் எவ்வாறு அத்துமீறி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. ட்ரோன் தாக்குதலின் போது ஹெலிகாப்டரில் புடின் இருந்த நிலையில், இது குறித்து உக்ரைன் அரசோ, அந்நாட்டு ராணுவமோ எவ்வித விளக்கமும் வெளியிடவில்லை.

Advertisement