பிளாஸ்டிக்கை எதிர்க்கும் லீலா

மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில், எந்த இடத்தில் திருவிழா நடந்தாலும், அங்கு லீலா சிவகுமார் தவறாமல் ஆஜராவார். 'பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள்' என, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

பிளாஸ்டிக் இயற்கைக்கு பாதகமானது. இது மண்ணில் எளிதில் மக்காது; சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. இதை உணர்ந்தே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் பிளாஸ்டிக் பயன்பாடு குறையவில்லை. இது பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

போலீஸ் அதிகாரி



இதற்கிடையே ஒரு பெண், பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். மைசூரு நகரில் வசிப்பவர் லீலா சிவகுமார். இவர், 2005லிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

திருமணமான புதிதில், லீலா யோகா பயிற்சி மையத்தில் சேர்ந்தார். இங்கு யோகாவுடன் சுற்றுச்சூழல் குறித்து, தகவல் தெரிவித்தனர். இதை கேட்ட லீலாவுக்கு, இயற்கை மீது ஆர்வம் ஏற்பட்டது.

தன் வீட்டில் செடிகள் வளர்க்க துவங்கினார். அதன்பின் காந்தி சர்வோதயா மண்டலி, மைசூரு கிளீன் பவுன்டேஷன் அமைப்புகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பணியாற்றுகிறார்.

சாமுண்டி மலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். வாரந்தோறும் கடைகளுக்கு சென்று, 'பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாதீர்கள். இது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. பயன்படுத்திய பின் சாலைகளில் வீசும் பிளாஸ்டிக்கை, மாடுகள் தின்கின்றன. பிராணிகளின் உயிரிழப்புக்கும் காரணமாகின்றன' என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

நண்பர்கள் உதவி



சிக்கமகளூரு, ஹாசன், மைசூரு பகுதிகளில் தன் சொந்த செலவில், மரக்கன்றுகள் நட்டுள்ளார். கோடையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறார். காலை, மாலையில் நடைபயிற்சிக்கு செல்லும்போது, எங்காவது குப்பை குவிந்து கிடந்தால், அதை தானே சுத்தப்படுத்திவிட்டு வருகிறார்.

ஆறுகள், ஏரிகளை துாய்மைப்படுத்தும் பணிகளிலும் பங்கேற்கிறார். அது மட்டுமின்றி, மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில், எங்கு திருவிழா நடந்தாலும், லீலா ஆஜராகிறார்.

'பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்' என, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விவரித்து, அதை பயன்படுத்த வேண்டாம் என, அறிவுரை கூறுகிறார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, இவர் காட்டும் ஆர்வம், அக்கறை அனைவரையும் வியப்படைய வைக்கிறது. இவரால் ஈர்க்கப்பட்டு, பலரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்தியுள்ளனராம். இது லீலாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.



- நமது நிருபர் -

Advertisement