நகை பறிக்க வந்தவர்களை விரட்டிய மூதாட்டி

ஒட்டன்சத்திரம்,:ஒட்டன்சத்திரம் அருகே டூ-வீலரில் வந்து நகை பறிக்க முயன்ற இருவரை, மூதாட்டி விரட்டியடித்ததால், 10 சவரன் தாலிச்செயின் தப்பியது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், ஜி.ஜி.நகரை சேர்ந்த மர வியாபாரி செல்லப்பன். இவரது மனைவி காளியம்மாள், 66. நேற்று வீட்டின் முன் தனியாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது, டூ-வீலரில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

தண்ணீர் கொண்டு வர கேட்டின் அருகே சென்ற போது, டூ-வீலர் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் காளியம்மாள் அணிந்திருந்த, 10 சவரன் தாலி செயினை பறிக்க முயற்சித்தான்.

சுதாரித்த காளியம்மாள், செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவர்களை விரட்டி டூ-வீலரில் இருந்து கீழே தள்ளிவிட்டு சத்தம் போட்டார். அவர்கள் சுதாரித்துக்கொண்டு டூ-வீலரில் தப்பினர்.

அக்காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிஉள்ளது. ஒட்டன்சத்திரம் போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Advertisement