தாயை கொன்று துாக்கில் தொங்கவிட்ட மகன்
தேன்கனிக்கோட்டை,: தாயை அடித்து கொன்று துாக்கில் தொங்க விட்டு, தற்கொலை நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யன்துரை, 67; கூலி தொழிலாளி. இவரது மனைவி பூபதி, 60. தம்பதியின் மகன்கள் வெள்ளையன், 38, பரமசிவன், 34, சேட்டு, 32, சின்னதம்பி, 31.
பரமசிவன், மது, கஞ்சா போதைக்கு அடிமையானவர். இவருக்கு மனைவி, இரு குழந்தை உள்ளனர். பரமசிவன், தன் பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்து, அவர்களை அடித்து துன்புறுத்தினார்.
நேற்று முன்தினம் மாலை, போதையில் இருந்த பரமசிவன்,அய்யன்துரையை கடுமையாக தாக்கியதால், அவர் காட்டுப்பகுதிக்கு தப்பியோடினார்.
தொடர்ந்து, கூலி வேலைக்கு சென்று திரும்பிய பூபதியிடம் தகராறு செய்த பரமசிவன், அவரை கயிற்றால் தாக்கி, கழுத்தை நெரித்து கொன்றார்.
கொலையை மறைக்க வீட்டில் துாக்கில் தொங்கவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். தேன்கனிக்கோட்டை போலீசார் பரமசிவத்தை கைது செய்தனர்.