தினமலர் தலையங்கம்: நக்சல்கள் ஆதிக்கம் ஒழிப்பது அவசியம்!

சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், நக்சல்கள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இந்த இடதுசாரி பயங்கரவாதத்தால், 2004 முதல் 2025 வரை, 8,895 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக, சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், நக்சல்களை ஒடுக்கும் நடவடிக்கையில், மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.


கடந்த சில மாதங்களாக, நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 2026க்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க முடிவெடுத்துள்ள மோடி அரசு, 'ஆப்பரேஷன் பிளாக் பாரஸ்ட்' என்ற நடவடிக்கையையும் துவக்கி உள்ளது.


இந்நிலையில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. கடந்த 21ம் தேதி பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், 27 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.


அவர்களில், நக்சல் அமைப்பின் பொதுச் செயலராக இருந்த பசவராஜும் ஒருவர். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக, நக்சல் அமைப்பில் பொதுச்செயலராக இருந்த ஒருவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 2010ல் தந்தேவாடா என்ற இடத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய கொடூர தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 76 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுபயங்கர தாக்குதலை முன்னின்று நடத்தியவர் பசவராஜ். 2024 ஜனவரி முதல் இந்த மாதம் வரை, சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும், 350 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், முன்னர் நக்சல்கள் ஆதிக்கம் இருந்தது. தற்போது அங்கெல்லாம், அவர்களின் நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. அதனால், சத்தீஸ்கர் மாநிலத்தில், குறிப்பாக பாஸ்தர், நாராயண்பூர், தந்தேவாடா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்கள் தான், நக்சல்களின் கோட்டையாக கருதப்படுகின்றன. ஆந்திராவில் செயல்பட்டு வந்த நக்சல்களும், தற்போது இந்த பகுதிகளுக்கு சென்று விட்டனர். இப்படி இடம் மாறியவர்களில் ஒருவர் தான் பசவராஜு. இவர், ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் பிறந்தவர்; இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.


மஹாராஷ்டிரா, ஒடிசா, தெலுங்கானா மாநிலங்களை ஒட்டியுள்ள சத்தீஸ்கர் மாநிலம் வனப்பகுதி நிறைந்தது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் அதிகம் இல்லாத பகுதி இது. இப்பகுதியில் வசிக்கும் மக்களும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதால், நக்சல்கள் இப்பகுதியில் கால் பதிக்க அனுமதித்துள்ளனர்.


கடந்த காலங்களில் சத்தீஸ்களில் இருந்த அரசுகளும், இப்பகுதி மக்களை கண்டுகொள்ள வில்லை; அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்யவும் முன்வரவில்லை. அதுவும், இங்கு நக்சல்கள் ஆதிக்கம் வளர காரணமானது.


ஆனால், தற்போது ஆயுதங்களை கைவிட்டு, சரண் அடையும் நக்சல்களுக்காக, சத்தீஸ்கர் மாநில அரசு சில மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, சரண் அடைவோருக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், வீடு வழங்குவதோடு, அவர்கள் வேலை செய்து பிழைப்பதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்கி வருகிறது.


மனம் திருந்திய நக்சல்களுக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதனால், கடந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில், 800க்கும் மேற்பட்ட நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.


இது மட்டுமின்றி, நக்சல் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றன. இந்த வளர்ச்சி பணிகள் தொடர்வதுடன், வேலைவாய்ப்பை பெருக்குவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும். இவையே, நக்சல்கள் உருவாவதை தடுக்கும் வழியாக அமையும்.

Advertisement