பாதாள சாக்கடை பணியின்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

அனகாபுத்துார் :பெரம்பலுார் மாவட்டம், பசுமலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி, 55. இவரது மகன் சாமிக்கண்ணு, 24.

இருவரும், அனகாபுத்துார் சுடுகாட்டில் இரும்பு ஷீட் அமைத்து தங்கி, பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கும் பணி செய்து வந்தனர்.

நேற்று முன்தினம், அனகாபுத்துார், பாரி நகர் கணபதி தெருவில், வீட்டு இணைப்பு கொடுக்க பள்ளம் தோண்டினர்.

அப்போது, பூமிக்கு அடியில் செல்லும் மின் வடத்தில் கடப்பாரை பட்டு, மின்சாரம் தாக்கியதில், சாமிக்கண்ணு துாக்கி வீசப்பட்டார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பரிசோதித்த மருத்துவர்கள், சாமிகண்ணு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

பாதுகாப்பின்மை

பம்மல் - அனகாபுத்துாரில், 211 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. குழாய் பதிக்கும் பணி முடிந்து, வீட்டு இணைப்பு தரப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், தொழிலாளர்கள் பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை நிருபிக்கும் வகையில், மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்துள்ளார்.

எனவே, பணியை மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் பணியை கண்காணிக்கும் நிறுவனம்மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

***

Advertisement