அமெரிக்க அதிபர் டிரம்ப் பெயரில் 150க்கும் மேற்பட்டோரிடம் மோசடி

4


பெங்களூரு: கர்நாடகாவில், சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் விளம்பரம் ஒன்று வலம் வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரில் இருந்த விளம்பரத்தில், 'குறுகிய நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தே பணியாற்றலாம். தொகையை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம். வீட்டில் இருந்தே ஆன்லைனில் நாங்கள் கொடுக்கும் பணியை செய்து முடித்தால், லட்சக்கணக்கான ரூபாய் ஊதியம் கிடைக்கும்' என, கூறப்பட்டிருந்தது.

இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பிய பலர், அதிலிருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினர். போனில் பேசிய நபர், 'பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் கிடைக்கும்' என, கூறினார்.



அதன்படி பலரும் அந்நபர் கூறிய செயலியை கிளிக் செய்து, லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தனர். செயலியில் பார்த்தபோது, இவர்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாக காட்டியது. அந்த தொகையை எடுக்க முயன்றபோது, முடியவில்லை.

இதை பற்றி அந்நபரிடம் கேட்டபோது, 'லாபத்துக்கு வரி செலுத்த வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும்' என்றார். இதை நம்பி மேலும் பணம் செலுத்தினர். ஆனால் லாபமும் கிடைக்கவில்லை; முதலீடு செய்த பணமும் திருப்பி கிடைக்கவில்லை.



அந்நபரின் தொடர்பு எண்ணும் செயல் இழந்திருந்தது. அதன்பின்னரே ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். பெங்களூரு, மங்களூரு, ஹூப்பள்ளி, ஹாவேரி, துமகூரு, கலபுரகி, மைசூரு, பல்லாரி, பீதர், ஷிவமொக்கா உட்பட பல்வேறு நகரங்களில் 150க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளன.


செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரில் வீடியோவை உருவாக்கியது தெரிந்தது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை உண்மையென நம்பி பலரும் மோசடி வலையில் சிக்கி, பணத்தை பறிகொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement