மீண்டும் 'டோயிங்' நடைமுறை அமைச்சர் பரமேஸ்வர் உறுதி

பெங்களூரு : ''பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், மீண்டும் வாகனங்கள் 'டோயிங்' செய்யப்படும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

'பெங்களூரில் விதிமுறைகள் மீறி நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்யும் பணி மீண்டும் துவங்கும்' என்று துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து, நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:

சாலை ஓரங்களில் விதிமுறையை மீறி நிறுத்தப்படும் வாகனங்களை டோயிங் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இச்செயல்பாடு பொது மக்களிடம் வரவேற்பு பெற்றால், மீண்டும் அதை செயல்படுத்துவோம்.

எந்த முடிவெடுத்தாலும், பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்து விவாதிப்போம்.

மாண்டியாவில் வாகன சோதனையின் போது 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் போலீசாரின் செயல்பாடு வெட்கக்கேடானது. இத்தகைய சம்பவங்கள் தொடராதபடி நடவடிக்கை எடுக்கப்படும். இச்சம்பவத்தில் மூன்று ஏ.எஸ்.ஐ.,க்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.

மாண்டியா போலீசார், மனிதாபிமானத்தை காட்டவில்லை. மேலும் குழந்தையை இழந்த பெற்றோரிடம், போலீசார் முறையாக நடந்து கொள்ளவில்லை. இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளோம்.

போலீசார் திடீரென்று சாலையின் குறுக்கே வந்து வாகனத்தை நிறுத்துவதாக மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். போலீசார் விதிமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும்.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோர்; ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் விதிமுறையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக ஓட்டினால் அவர்களை பிடிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement