பேயர்ன் முனிக் மீண்டும் வெற்றி: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

மயாமி கார்டன்ஸ்: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பேயர்ன் முனிக் அணி 2-1 என, போகா ஜூனியர்ஸ் அணியை வீழ்த்தி, 2வது வெற்றியை பதிவு செய்தது.
அமெரிக்காவில், முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 32 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

மயாமி கார்டன்சில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), போகா ஜூனியர்ஸ் (அர்ஜென்டினா) அணிகள் மோதின. ஹாரி கேன் (18 வது நிமிடம்), மைக்கேல் ஒலிஸ் (84வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க பேயர்ன் முனிக் அணி 2-1 என வெற்றி பெற்றது. முதல் போட்டியில் ஆக்லாந்து சிட்டி அணியை (நியூசிலாந்து) வீழ்த்திய பேயர்ன் முனிக் அணி, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.
ஆர்லாண்டோவில் நடந்த மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் பென்பிகா அணி (போர்ச்சுகல்) 6-0 என, ஆக்லாந்து சிட்டி அணியை (நியூசிலாந்து) வீழ்த்தியது.


செல்சி ஏமாற்றம்: பிலாடெல்பியாவில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் செல்சி (இங்கிலாந்து), பிளமெங்கோ (பிரேசில்) அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய செல்சி அணி 1-3 என தோல்வியடைந்தது. மற்றொரு 'டி' பிரிவு லீக் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் அணி (அமெரிக்கா) 0-1 என, எஸ்பெரன்ஸ் டி துனிஸ் அணியிடம் (துனிசியா) தோல்வியடைந்தது.

Advertisement