ரிஷாப் பன்ட் 'நம்பர்-7': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ரிஷாப் பன்ட் 7வது இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. பேட்டர் தரவரிசையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷான் பன்ட், 801 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து முதன்முறையாக 7வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்திய லீட்ஸ் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் சதம் (134, 118 ரன்) விளாசினார். இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் (101) கடந்த இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (851 புள்ளி) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். முதல் இன்னிங்சில் 147 ரன் விளாசிய இந்திய கேப்டன் சுப்மன் கில் (660), 25வது இடத்தில் இருந்து 20வது இடத்துக்கு முன்னேறினார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (889) முதலிடத்தில் தொடர்கிறார். இரண்டாவது இன்னிங்சில் சதம் (149) விளாசிய இங்கிலாந்தின் பென் டக்கெட் (787) 8வது இடத்துக்கு முன்னேறினார்.
லீட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் சாய்த்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, 907 புள்ளிகளுடன் 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா (376) முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Advertisement