திண்டுக்கல், நெல்லை ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய திண்டுக்கல், நெல்லை அணிகள் தோல்வியடைந்தன.
திண்டுக்கல், நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் திருப்பூர், நெல்லை அணிகள் மோதின. திருப்பூர் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள, வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நெல்லை அணி களமிறங்கியது. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவுலிங்' தேர்வு செய்தார்.
கிஷோர் அரைசதம்: திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது ராக்கி பாஸ்கர் பந்தில் சாத்விக் (41) அவுட்டானார். சோனு யாதவ் 'வேகத்தில்' ரஹேஜா (32) வெளியேறினார். பின் இணைந்த கேப்டன் சாய் கிஷோர், முகமது அலி ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்த போது சோனு யாதவ் பந்தில் முகமது அலி (20) போல்டானார். அபாரமாக ஆடிய சாய் கிஷோர் 31 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 55 ரன்னில் (8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டமிழந்தார்.
திருப்பூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. நெல்லை சார்பில் சோனு யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
நடராஜன் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய நெல்லை அணிக்கு குருசாமி அஜிதேஷ் (28), ரித்திக் ஈஸ்வரன் (39) ஓரளவு கைகொடுத்தனர். அதிஷ் (17), சோனு யாதவ் (14) நிலைக்கவில்லை. கேப்டன் அருண் கார்த்திக் (2), அத்னன் கான் (1), சச்சின் ரதி (2) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர். நெல்லை அணி 19.4 ஓவரில் 113 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. திருப்பூர் சார்பில் நடராஜன் 3 விக்கெட் சாய்த்தார்.
திண்டுக்கல் ஏமாற்றம்
மற்றொரு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. திண்டுக்கல் அணி ஏற்கனவே 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது. திருச்சி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற, வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த திண்டுக்கல் அணிக்கு ஷிவம் சிங் (37), ஹன்னி சிங் (21) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய விமல் குமார், 35 பந்தில் அரைசதம் எட்டினார். திண்டுக்கல் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்தது. விமல் குமார் (55), வருண் சக்ரவர்த்தி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திருச்சி அணிக்கு ஜெகதீசன் கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி கைகொடுத்தது. பெரியசாமி பந்தில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த சஞ்சய், 39 பந்தில் அரைசதம் எட்டினார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 98 ரன் சேர்த்த போது கவுசிக் (42) அவுட்டானார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன் தேவைப்பட்டது. சந்தீப் வாரியர் வீசிய முதல் மூன்று பந்தில் 4 ரன் எடுக்கப்பட்டது. திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சஞ்சய் (55), ஜமால் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
@quote@
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்த சேப்பாக்கம் (14 புள்ளி), திருப்பூர் (10), திண்டுக்கல் (8), திருச்சி (6) அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தன. 'ரன்-ரேட்' அடிப்படையில் சேலம் அணி (6) வெளியேறியது. நாளை நடக்கவுள்ள தகுதிச் சுற்று-1ல் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதுகின்றன. 'எலிமினேட்டர்' போட்டியில் (ஜூலை 2) திண்டுக்கல், திருச்சி அணிகள் விளையாடுகின்றன.quote