முன்னாள் படை வீரர்கள் சிறப்பு ஓய்வூதிய குறை தீர்க்கும் முகாம்

விழுப்புரம் : முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம் வரும் 4 மற்றும் 5 ம் தேதி திருக்கோவிலுாரில் நடக்கிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களை ஒருங்கிணைத்து, திருக்கோவிலுார் பஸ் நிலையம் அருகில் உள்ள ஆர்.சி., சர்ச்சில் வரும் 4 மற்றும் 5ம் தேதி நடமாடும் வாகனம் மூலம் நடக்கிறது.

முகாமில், சென்னை தலைமை அலுவலகம், பி.சி.டி.ஏ., சார்பாக அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு மற்றும் பேன் கார்டு ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும், விவரங்களுக்கு விழுப்புரம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146 -220524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement