பைனலில் திருப்பூர் அணி * அரைசதம் விளாசினார் சாத்விக்

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறியது திருப்பூர் அணி. நேற்று நடந்த 'தகுதிச்சுற்று 1'ல் சேப்பாக்கம் அணியை 79 ரன்னில் வீழ்த்தியது. சாத்விக் அரைசதம் விளாசினார்.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடம் பெற்ற சேப்பாக்கம், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறின. திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த 'தகுதிச்சுற்று 1'ல் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி பீல்டிங் தேர்வு செய்தது.
சாத்விக் அரைசதம்
திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவரில் 56 ரன் சேர்த்த போது, துரதிருஷ்டவசமாக ரன் அவுட்டானார் துஷார் (28 ரன், 13 பந்து). சாத்விக், 36 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 40 பந்தில் 57 ரன் எடுத்து அவுட்டானார்.
அபிஷேக் வீசிய 18 வது ஓவரில் சசிதேவ் (4, 6, 6), பிரதோஷ் (6) இணைந்து 24 ரன் சேர்த்தனர். திருப்பூர் அணி 20 ஓவரில் 202/5 ரன் குவித்தது. பிரதோஷ் (16) அவுட்டாகாமல் இருந்தார்.
சேப்பாக்கம் அணிக்கு ஆஷிக் (14), மோகித் ஹரிஹரன் (25) ஏமாற்றம் தந்தனர். கேப்டன் பாபா அபராஜித் 13 பந்தில் 30 ரன் எடுத்து அவுட்டானார். விஜய் சங்கரும் (14) நிலைக்கவில்லை. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். சேப்பாக்கம் அணி 16.1 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது.
இன்னொரு வாய்ப்பு
சேப்பாக்கம் அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் வெல்லும் அணியுடன் 'தகுதிச்சுற்று 2' ல் மோத வேண்டும் (ஜூலை 4). இதில் வென்றால் பைனலுக்கு செல்லலாம்.