முருக பக்தர் மாநாடு ; அண்ணாமலை மீது வழக்கு

மதுரை : மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி அரசியல் பேசப்பட்டதால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., அதிருப்தியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி புகார் அளித்தார்.

மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள புகழேந்தி, மனுவில் கூறியதாவது:



மதம், பிற கட்சியின் தலைவர்கள், அவர்களைப் பற்றிய எந்த விமர்சனமும் இல்லாமல் முருக பக்தர் மாநாட்டை நடத்துவதாக கொடுத்த உறுதிமொழியை கடைப்பிடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


ஆனால், அதற்கு எதிராக மாநாட்டில் பேசினர். இது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. ஈ.வெ.ரா., அண்ணாதுரையை இழிவுபடுத்தி பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லுார் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜன் செல்லப்பா, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வேடிக்கை பார்த்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.


இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகழேந்தி கூறுகையில், ''மாநாட்டில் அவதுாறாக பேசியவர்கள் மீது குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.



இதற்கிடையில், முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

Advertisement