மேலும் 30 பூங்காக்களில் அமைகிறது நீரை உள்வாங்கும் 'ஸ்பாஞ்ச் பார்க்'

சென்னை: சென்னையில் நிலத்தடிநீர் அதிகரிக்க 57 பூங்காக்களில் அமைக்கப்பட்ட நீரை உள்வாங்கும் 'ஸ்பாஞ்ச் பார்க்' என்ற நீர்த்தேக்கம் பயன் அளித்ததால், மேலும் 30 பூங்காக்களில் 8.10 கோடி ரூபாயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

சென்னை மாநகராட்சியில், மொத்தம் 908 பூங்காக்கள் உள்ளன.

இதில், நீரோட்ட பாதை, பரப்பு பொறுத்து 2,000 முதல் 5,000 சதுர அடி பரப்பு வீதம், 10 முதல் 15 அடி ஆழத்தில் நீரை உள்வாங்கும் ஸ்பாஞ்ச் பார்க் எனும் நீர்த்தேக்கம் அமைக்கப்படுகிறது.

நிலத்தடி நீரை அதிகரிக்கும் நோக்கில், மாநகராட்சி சார்பில் கொண்டு வரப்பட்டது. 2022 - 23ம் ஆண்டில், 7.67 கோடி ரூபாயில், 57 பூங்காக்களில் ஸ்பாஞ்ச் பார்க் அமைக்கப்பட்டது.

இதனால், சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் அதிகரித்து, ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் போதிய அளவு கிடைத்தது.

இந்நிலையில் கூடுதலாக 30 பூங்காக்களில், ஸ்பாஞ்ச் பார்க் உருவாக்க, 8.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஸ்பாஞ்ச் பார்க் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழைக்கு முன் இப் பணிகளை முடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பூமிக்குள் மழைநீர் இறங்க வாய்ப்புள்ள இடங்களில், மாநகராட்சி சார்பில் குளங்களில் கிணறு, வடிகால்வாய்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, பூங்காக்களில் நீரை உள்வாங்கும் ஸ்பாஞ்ச் பார்க் என்ற நீர்த்தேக்கம் கொண்டு வரப்பட்டு, நிலத்தடி நீரை உயர்த்தும் நோக்கில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.

Advertisement