சொந்த கட்சி கவுன்சிலர்களால் பதவி இழந்த சங்கரன்கோவில் நகராட்சி தலைவி!

சங்கரன்கோவில்: சொந்த கட்சியான தி.மு.க.,வின் கவுன்சிலர்களினால் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி தமது பதவியை இழந்துள்ளார்.


தென்காசி மாவட்டத்தில் உள்ளது சங்கரன்கோவில். இந்த நகராட்சி தி.மு.க., வசம் இருக்கிறது. நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் இருக்கின்றன. அதன் தலைவியான உமா மகேஸ்வரி மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.


மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை, தெரு விளக்குகள், சாலை அமைப்பது என எந்த திட்டத்திலும் உறுப்பினர்களின் கோரிக்கையை அவர் ஏற்க .மறுப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டு இருந்தது.


இந்த மனுவை அடிப்படையாக கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது. ஓட்டெடுப்பின்போது சொந்த கட்சியான தி.மு.க., கவுன்சிலர்கள், அ.தி.மு.க., ம.தி.மு.க., கவுன்சிலர்கள் என அனைத்து கட்சியினரும் உமா மகேஸ்வரிக்கு எதிராக வாக்களித்தனர்.


மொத்தம் 29 கவுன்சிலர்கள் இந்த ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர். இதில் ஒரேயொரு ஓட்டு மட்டுமே உமா மகேஸ்வரிக்கு ஆதரவாக விழுந்தது. மற்றவை அனைத்தும் அவருக்கு எதிராகவே இருந்தது. இதையடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுவிட, அவர் நகராட்சி தலைவர் பதவியை இழந்துள்ளார்.


சொந்த கட்சியினரின் கடும் எதிர்ப்பால், கைவசம் இருந்த நகராட்சி தலைவர் பதவி பறிபோயிருப்பது, அக்கட்சியினர் மட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement