6 மாதமாக குடிநீர் வரல... கிராம மக்கள் கடும் அதிருப்தி

பல்லடம்; பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக்காளிபாளையம் கிராமத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
ஊராட்சியின் எல்லையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
அத்திக்கடவு, பில்லுார் மற்றும் 'எல் அண்ட் டி' குடிநீர் இங்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதமாக, மேற்கூறிய எந்த குடிநீரும் எங்கள் பகுதிக்கு வினியோகிக்கப்படவில்லை. சில மாதங்களுக்கு முன், அல்லாளபுரம் - - பொல்லிக்காளிபாளையம் ரோடு புதுப்பிக்கப்பட்டது.
அப்போது, எங்கள் பகுதிக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய் உடைந்ததாகவும், அதனை சரி செய்த பின் குடிநீர் வினியோகிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். அதன்பின், பலமுறை ஊராட்சி நிர்வாகத்தில் இது தொடர்பாக புகார் கூறியும், எந்த பயனும் இல்லை.
ஒவ்வொரு வீடுகளிலும், குடிநீர் கேன் விலைக்கு வாங்கிதான் பயன்படுத்தி வருகிறோம். இதனால், வருமானத்தின் பெரும்பகுதி குடிநீருக்கே செலவாகிறது. அருகிலுள்ள பொன் நகர், அய்யம்பாளையம் கிராமங்களுக்கு குடிநீர் முறையாக வினியோகிக்கப்படும் நிலையில், இங்கு மட்டும் குடிநீர் வினியோகம் இல்லை.
இதேபோல், கழிவுநீர் கால்வாய் அடைத்து, துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி, குழந்தைகள் காய்ச்சலால் பாதிப்பட்டு வருகின்றனர்.
ஊராட்சியின் கடைக்கோடியில் உள்ளதால் அதிகாரிகளும் எங்களது கிராமத்தை புறக்கணிக்கின்றனர். முறையாக வரி செலுத்தி வரும் எங்களுக்கு, அடிப்படை வசதிகளே கிடையாது. உடனடியாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகிக்க வேண்டும். இல்லையெனில், எங்கள் பகுதியிலுள்ள யாரும் வரி செலுத்த மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.