சேலத்தில் கார் திருட்டு சித்தோட்டில் மடக்கிய போலீஸ்
சேலம், சேலம், பழைய சூரமங்கலத்தை சேர்ந்த, கார் டிரைவர் சரவணன், 44. இவர் நேற்று முன்தினம், சேலம் ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள, 'பார்க்கிங்' பகுதியில், 'டவேரா' காரை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்தபோது, காரை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் வைகுந்தம் சுங்கச்சாவடியை கார் கடந்ததாக, பணம் எடுத்ததற்கான குறுந்தகவல் வந்தது. இதை சரவணன், போலீசாரிடம் தெரிவிக்க, சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே நேரம் மற்றொரு வழக்கு தொடர்பாக, சூரமங்கலம் போலீசார், வாகனத்தில் கோவைக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்களை, மாநகர போலீசார் தொடர்பு கொண்டு, கார் திருட்டு விபரத்தை தெரிவித்தனர்.
இதனால் பெருந்துறை அருகே, சித்தோட்டில், 2 கி.மீ., விரட்டிச்சென்ற போலீசார், காரை மடக்கினர். காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, 'இந்த கார் என்னுடையது' என கூறி வாக்குவாதம் செய்தார். அவரை, போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, காரையும் சேலம் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம் சிம்பலாபுரத்தை சேர்ந்த சுஷாந்த், 26, என்பதும், நேற்று முன்தினம் ரயிலில் சேலம் வந்த நிலையில், அங்கு சாவியுடன் இருந்த காரை பார்த்ததும் எடுத்து ஓட்டிச்சென்றதும் தெரிந்தது. மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று இருந்ததால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.