ஹெல்மெட் கழற்றியபோது கேமராவில் பதிவு மூதாட்டியிடம் சங்கிலி பறித்தவர் சிக்கினார்
சங்ககிரி, சங்ககிரி, தேவூர் அருகே கத்தேரி, கள்ளிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது மனைவி செல்லம்மாள், 73. இவர் கடந்த மாதம், 20ல் வளையக்காரனுாரில் இருந்து கள்ளிப்பாளையம் சாலையில் மொபட்டில் வந்தபோது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த, 2 பேர், செல்லம்மாள் அணிருந்திருந்த, 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். தேவூர் போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில் போலீசார், சம்பவ இடத்தில் இருந்து, கத்தேரி, பவானி, கோவை செல்லும் வழிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கேமரா பதிவில், சங்கிலி பறித்தவர்கள், ஹெல்மெட்டை கழற்றிய காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரித்ததில், கோவை, ஜோதிபுரம், பாரதி நகரை சேர்ந்த மாரீசன், 29, என தெரிந்தது. அவரை, தேவூர் போலீசார், நேற்று கைது செய்தனர். அவருடன் வந்தவர், கல்லுாரி மாணவர் என தெரிந்தது. அவரை, போலீசார் தேடுகின்றனர். மேலும் மாரீசனிடமிருந்து, 2.5 பவுன் சங்கிலியை மீட்டனர்.