விஜயின் கொள்கை எதிரி பட்டியலில் அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா? திருமாவளவன் கேள்வி

7


சென்னை : ''விஜயின் கொள்கை எதிரி பட்டியலில் அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா?'' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:



தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், 'பா.ஜ.,வும், தி.மு.க.,வும் தான் தன் கொள்கை எதிரிகள்' என கூறி இருக்கிறார்.


அ.தி.மு.க.,வை அவர் விமர்சித்தாலும், அ.தி.மு.க., மீது தன் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவில்லை. கொள்கை எதிரிகள் பட்டியலில், அ.தி.மு.க.,வுக்கு இடம் உண்டா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தாதது ஏன்?



தமிழகத்தில் தி.மு.க., ஆளுங்கட்சியாக உள்ளது. எதிர்ப்பு நிலையில் இருக்கும் அனைத்து கட்சியினரும் ஆளுங்கட்சியை எதிர்ப்பது, இயல்பான ஒன்று.


அந்த அடிப்படையிலேயே நடிகர் விஜயும், தன் தி.மு.க., எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்திருக்கிறார். விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பு பிரச்னை தொடர்பாக, பரந்துார் பகுதி மக்களுக்கு, விஜயின் போராட்டம் நீதியை பெற்று தந்தால், அதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை தொடர்ந்து, திருச்சி, விரகலுாரில் ஸ்டேன் சுவாமி சிலை திறப்பு விழாவுக்காக சென்ற திருமாவளவன், அங்கு கூறியதாவது:



பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் ஒன்று சேருவர் என நம்புகிறேன். ஒரே பா.ம.க.,வாகத் தான் தேர்தலை சந்திப்பர்.


'தேர்தலுக்கு பின்னரே, முதல்வரை தேர்ந்தெடுப்போம்' என அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பா.ஜ., சொல்லும் நிலை குறித்து, பழனிசாமி தான் கூற வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், அதை உடைப்பது பா.ஜ., தந்திரம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement