இந்தியாவில் 2500 கட்சிகள்: மோடி கூறியதை கேட்டதும் கானா நாட்டு பார்லியில் சிரிப்பலை

5

அக்ரா: ''மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை துாணாக உள்ளது. நிலையான மற்றும் வளமான உலகிற்கு வலுவான இந்தியா பங்களிக்கும்,'' என, கானா பார்லிமென்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ''எங்கள் நாட்டில், 2,500 கட்சிகள் உள்ளன,'' என்று, மோடி கூறியதும், பார்லி., எம்.பி.,க்கள், குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.

ஐந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலாவதாக, மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவுக்கு அவர் சென்றார்.

தலைநகர் அக்ராவில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, அந்நாட்டின் அதிபர் ஜான் டிரமணி மஹாமா நேரில் சென்று வரவேற்றார். கடந்த 30 ஆண்டுகளில், கானாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

அக்ராவில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் ஜான் டிரமணி மஹாமாவை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியா - கானா இடையே வர்த்தகம், முதலீடு, விவசாயம், திறன் மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக, அதிபர் ஜான் டிரமணி மஹாமாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

இதையடுத்து, வர்த்தகம், நிதி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், இந்தியா - கானா இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முதல் பிரதமர்



இதன்பின், பிரதமர் மோடி கூறுகையில், ''கானாவின் வளர்ச்சி பயணத்தில், இந்தியா வெறும் கூட்டணி நாடு மட்டுமல்ல; சக பயணியாகவும் இருக்க விரும்புகிறது. அந்நாட்டில், இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.

''இதை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். யு.பி.ஐ., டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அனுபவத்தை கானாவுடன் பகிர்ந்து கொள்வோம்,'' என்றார்.

இதைத் தொடர்ந்து, கானா பார்லி.,யில் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்நாட்டு பார்லி.,யில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பேசியதாவது:



உலகளாவிய நிச்சயமற்ற தன்மை நிறைந்த இந்த கால கட்டத்தில், இந்தியாவின் ஜனநாயக ஸ்திரத்தன்மை நம்பிக்கையின் கதிராக பிரகாசிக்கிறது. இந்தியாவின் விரைவான முன்னேற்றம் உலகின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, உலகின் வலிமைக்கு ஒரு நம்பிக்கை துாணாக உள்ளது. நிலையான மற்றும் வளமான உலகிற்கு வலுவான இந்தியா பங்களிக்கும்.

உலகின் வளர்ச்சிக்கு நாங்கள் ஏற்கனவே, 16 சதவீதம் பங்களிக்கிறோம். இந்தியா ஒரு புதுமை மற்றும் தொழில்நுட்ப மையமாக விளங்குவதால், உலகளாவிய நிறுவனங்கள் ஒன்றிணைய விரும்புகின்றன.

'குளோபல் சவுத்' எனப்படும் உலகின் தெற்கு நாடுகளை யாராலும் புறக்கணிக்க முடியாது. நாங்கள் இல்லாமல், உலகம் முன்னேற முடியாது. எங்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தை கொடுக்க வேண்டும். உலக நிர்வாகத்தை மாற்றி அமைக்க வேண்டிய நேரமிது.

அதனால் தான், 'ஜி - 20' அமைப்பின் தலைமைப் பொறுப்பில் நாங்கள் இருந்த போது, 'ஒரு பூமி; ஒரு குடும்பம்; ஒரு எதிர்காலம்' என்ற தொலைநோக்கு பார்வையுடன் செயலாற்றினோம். எங்கள் தலைமையில், ஆப்ரிக்க யூனியனுக்கு ஜி - 20 அமைப்பில் நிரந்தர உறுப்பினர் இடம் கிடைத்ததற்கு பெருமைப்படுகிறோம்.

ஆப்ரிக்காவின் இலக்குகளை அடைவதே எங்கள் முன்னுரிமை.

இந்தியாவின் நோக்கம் முதலீடு செய்வது மட்டுமல்ல, அதிகாரம் அளிப்பது தான். ஆப்ரிக்கா கண்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் கலங்கரை விளக்கமாக கானா விளங்குகிறது.

ஜனநாயகம் மற்றும் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் ஒரு நிலமாக அந்நாடு உள்ளது. அந்நாட்டின் பார்லி.,யில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

உலகின் மருந்தகமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அறிவியல், விண்வெளி, விமானப் போக்குவரத்து மற்றும் விளையாட்டுகளில், இந்தியப் பெண்கள் முன்னணியில் உள்ளனர்.

இந்தியா நிலவில் தரையிறங்கியது. தற்போது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கிறார். இப்படி அனைத்து துறைகளிலும் எங்கள் நாடு தலைசிறந்து விளங்குகிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எங்கள் இலக்கு.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

பாரம்பரிய உடை



பார்லி.,யில் பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ''ஜனநாயகத்தின் தாயாக இந்தியா உள்ளது. எங்களை பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஒரு அமைப்பு மட்டுமல்ல; நம் அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி. நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன.

''பல்வேறு மாநிலங்களை பல கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மேலும், 22 அதிகாரப்பூர்வ மொழிகள் இருந்தாலும், பல மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவுக்கு வரும் மக்கள், திறந்த மனதுடன் வரவேற்கப்படுவதற்கு இதுவே காரணம்,'' என்றார்.

ஏறத்தாழ 2,500 கட்சிகள் உள்ளன என மோடி கூறியதை கேட்டதும் பார்லி.,யில் இருந்த எம்.பி.,க்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர். ஒருசில எம்.பி.,க்கள் இந்திய பாரம்பரிய உடை அணிந்து பார்லி.,க்கு வந்திருந்தனர்.


@block_B@

பாரம்பரிய மருத்துவத்துக்கும் போடப்பட்டது ஒப்பந்தம்



1. கலை, இசை, நடனம், இலக்கியம், பாரம்பரியம் ஆகியவற்றில் கலாசார புரிதலையும், பரிமாற்றங்களையும் ஊக்குவிக்க கலாசார பரிமாற்ற ஒப்பந்தம்

2. தரப்படுத்தல், சான்றிதழ், இணக்க மதிப்பீட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்த, இந்திய தரநிலைகள் ஆணையம் - கானா தரநிலைகள் ஆணையம் இடையே ஒப்பந்தம்

3. பாரம்பரிய மருத்துவக் கல்வி, பயிற்சி, ஆராய்ச்சி தொடர்பாக, கானாவின் மருத்துவ நிறுவனத்துக்கும், இந்தியாவின் ஆயுஷ் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம்

4. உயர்மட்ட உரையாடலை நிறுவனமயமாக்கவும், இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகளை வழக்கமான அடிப்படையில் மதிப்பாய்வு செய்யவும் கூட்டு ஆணையத்தை அமைத்தல்.block_B
@block_B@

மிக உயரிய விருதான, 'தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் அதிபர் ஜான் டிரமணி மஹாமா வழங்கி கவுரவித்தார். இதை பெற்ற பிரதமர் மோடி, கானா நாட்டுக்கு நன்றி தெரிவித்ததுடன், இந்தியா - கானா இடையேயான கலாசார மரபுகள், பன்முகத்தன்மை, வரலாற்று உறவுகளுக்கு விருதை அர்ப்பணிப்பதாகக் கூறினார்.

block_B

Advertisement