ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு முன் நிர்வாகிகள் கூட்டம் தேவை

மதுரை; 'டில்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடத்துவதற்கு முன், தமிழகத்தில் ஜி.எஸ்.டி., பிரச்னைகள் தொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்த வேண்டும்' என தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சார்பில் வணிகவரித்துறை செயலர் ஷில்பா பிரபாகர், கமிஷனர் நாகராஜனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இருவரையும் நேரில் சந்தித்த சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:

அரிசி, பருப்பு, கோதுமை, மாவு, வெல்லம், கருப்பட்டி, சிறுதானியம் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு வரிவிலக்கு வேண்டும். பதப்படுத்திய நுாடுல்ஸ், உடனடியாக சமைக்கும், உடனடியாக சாப்பிடும் வகை உணவுப்பொருட்களுக்கான 12 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். உலர் பழங்களில் சிலவற்றுக்கு 12 சதவீதம், சிலவற்றுக்கு 5 சதவீதம் உள்ளதை 5 சதவீதமாக மாற்ற வேண்டும்.

வரிவிதிப்பில் குழப்பம்



பிரட், அப்பளம், வடகத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ரஸ்க், வற்றலுக்கான 5 சதவீத வரியை நீக்க வேண்டும். ஹக்கா நுாடுல்சும், சாதாரண நுாடுல்சும் ஒரே மூலப்பொருள்தான். ஹக்காவுக்கான 12 சதவீத வரியை 5 சதவீதமாக்க வேண்டும். பூஜை கற்பூரத்திற்கு 18 சதவீத வரி, செங்கல்லுக்கு 12 சதவீத வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஒன்றோடொன்று தொடர்புடைய பொருட்களை ஒரே இனமாக பட்டியலில் கொண்டு வராமல் இஷ்டம் போல வரி விதிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

டில்லியில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடத்துவதற்கு முன், தமிழகத்தில் நிதியமைச்சர், வணிக வரித்துறை அமைச்சர், செயலர், கமிஷனர் தலைமையில் ஜி.எஸ்.டி., தொடர்பாக கோரிக்கை வைக்கும் வணிகர் சங்கங்களை அழைத்து விவாதிக்கவேண்டும். அவற்றை கவுன்சில் கூட்டத்தில் வைக்க வேண்டும் என்றனர்.

Advertisement