கரூரில் தந்தை, மகன் கொலை இழப்பீடு வழங்க நடவடிக்கை என்ன விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை: கரூர் அருகே முதலைப்பட்டியில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்கும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு, அரசுப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்க உத்தரவிட்டது. குளித்தலை அருகே முதலைப்பட்டி ராமர் (எ) வீரமலை 70. அவரது மகன் நல்லதம்பி 35. ராமர் விவசாயம் செய்தார். முதலைப்பட்டி அய்யனார் கோயில் பூஜாரியாக இருந்தார்.முதலைப்பட்டியில் அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இதை சிலர் ஆக்கிரமித்தனர். இவற்றை அகற்ற நடவடிக்கை கோரி அதிகாரிகளுக்கு ராமர், நல்லதம்பி மனு அனுப்பினர். குளத்தை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். அப்போது குளத்தின் ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகளுக்கு ராமர், நல்லதம்பி அடையாளம் காண்பித்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் ஒருவர் வழக்கு தொடந்தார். இதற்கு உதவியாக ராமர், நல்லத்தம்பி தகவல் கொடுத்திருக்கலாம் என அவர்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் ஆத்திரமடைந்தனர். 2019 ஜூலை 29 ல் நல்லதம்பி, ராமரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.குளித்தலை போலீசார் வழக்கு பதிந்தனர்.

இது தொடர்பாக 2019ல் உயர்நீதிமன்றக்கிளை பதிவாளர்(நீதித்துறை) அந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: ராமர், நல்லதம்பியை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அக்குடும்பத்தினருக்கு அரசுப்பணி, இழப்பீடு வழங்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதை அப்போது தானாக முன்வந்து விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.

பதிவாளர் தரப்பு வழக்கறிஞர் சிவராமன், அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி தெரிவித்ததாவது: கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு எதிராக சிலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு கூறினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இழப்பீடு, அரசுப் பணி வழங்குவது குறித்து தமிழக அரசிடம் விபரம் பெற்று அதன் தரப்பு வழக்கறிஞர் 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement