முதியவர் தற்கொலை வழக்கு நிதி நிறுவன ஊழியர் கைது

திருக்கனுார் : மளிகை கடை உரிமையாளர் தற்கொலை செய்த கொண்ட வழக்கில், தனியார் நிதி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு, தென்னஞ்சாலை வீதியை சேர்ந்தவர் பெரியண்ணசாமி, 59; மளிகை கடை நடத்தி வந்தார். இவர் கடந்த மார்ச் 15ம் தேதி வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி கவுரி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார், சந்தேக மரணம் 194 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

கடந்த ஏப்ரல் 17ம் தேதி அவரது மளிகை கடையில், பெரியண்ணசாமி எழுதிய கடிதம் ஒன்று இருந்தது. அதில், பெரியண்ணசாமி தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனுக்காக, தன்னை அவமானப் படுத்தியதால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்தார்.

இக்கடிதத்தின் அடிப்படையில் அவரது மனைவி கவுரி மீண்டும் திருக்கனுார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கடிதத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், கடிதம் பெரியண்ணசாமி எழுதியது தான் என்பது சமீபத்தில் உறுதியானது.

இதையடுத்து, நிதி நிறுவன மேலாளர் ஜெயச்சந்திரன், ஊழியர் சக்திவேல் முருகன் ஆகியோர் மீது போலீசார் தற்கொலைக்கு துண்டியதாக வழக்குப் பதிந்தனர்.

தனியார் நிதி நிறுவன ஊழியரான முதலியார்பேட்டை, லட்சுமி நகரை சேர்ந்த சக்திவேல் முருகன், 35; என்பவரை சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement