அதிவேக சதம்; வரலாறு படைத்தார் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

5

வொர்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, அதிவேக சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.


நடந்து முடிந்த பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் 14 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் அணிக்காக ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இவர், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 38 பந்துகளில் 100 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.


அதன்பிறகு, 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி இடம்பிடித்தார். தற்போது, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.

மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, முதல் போட்டியில் 48 ரன்னும், 2வது போட்டியில் 45 ரன்னும் அடித்தார். 3வது போட்டியில் 86 ரன்னுக்கு அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 52 பந்துகளில் சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்பு, பாகிஸ்தானைச் சேர்ந்த காம்ராம் குலாம் என்ற வீரர் 53 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.


இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 78 பந்துகளில் 143 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதில், 13 பவுண்டர்களும், 10 சிக்சர்களும் அடங்கும்.


ஏற்கனவே, 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்த இவர், 31 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார். இதன்மூலம், அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார். முதல் இடத்தில் இந்தியாவின் ரிஷப் பன்ட் (18 பந்துகள்) உள்ளார்.

Advertisement