தமிழ்நாடு' நாளையொட்டி மாவட்ட அளவில் பேச்சு, கட்டுரை போட்டி: 83 பேர் பங்கேற்பு


நாமக்கல், 'தமிழ்நாடு' நாளையொட்டி நடந்த மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டிகளில், அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 83 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தாய் தமிழ்நாட்டிற்கு, 'தமிழ்நாடு' என முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர் சூட்டிய, ஜூலை, 18ம் நாளை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 2021 அக்., முதல், 'தமிழ்நாடு நாளாக' இனி கொண்டாட வேண்டும்' என அறிவித்தார். இதையடுத்து, மாவட்ட அளவில் அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கும், கட்டுரை, பேச்சு போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது. தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி தலைமை வகித்தார். அதில், மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த, 83 மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள், வரும், 15ல், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வர்.

Advertisement