திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்டநதி போன்ற மேட்டூர் உபரி நீர் திட்டத்தை துவக்க கோரிக்கை
நாமக்கல், 'திருமணிமுத்தாறு, வசிஷ்டநிதி போன்ற மேட்டூர் உபரி நீர் திட்டங்களை தமிழக அரசு உடனே துவக்க வேண்டும்' என, கொ.ம.தே.க., பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மேட்டூர் அணை, பவானிசாகர் அணை போன்ற அணைகள் மழைக்காலங்களில் நிரம்பும்போது, உபரி நீர் வீணாக கடலில் கலப்பது வாடிக்கையான ஒன்றாக தொடர்ந்து நடக்கிறது. மேட்டூர் அணை தன் முழு கொள்ளளவை தற்போதே எட்டியுள்ளது. இனிவரும் மழைக்காலத்தில், அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தையும் கடலுக்கு திறந்துவிடுவதை தவிர வேறு வழியில்லாமல் இருக்கிறது. மேட்டூர் அணை நிரம்பி உபரியாக வரும் தண்ணீரை, பல வழிகளில் பயன்படுத்துகிற வாய்ப்பு இருந்தும், அதை பயன்படுத்தாமல் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திருமணிமுத்தாறு திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு கொண்டு சென்றிருக்க முடியும். ஆனால், அந்த திட்டம் இதுவரை துவங்கப்படவே இல்லை. தற்போதாவது, தமிழக அரசு திருமணிமுத்தாறு திட்டத்தை துவங்க முன்வர வேண்டும். அதேபோல், மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் உபரி நீர் திட்டத்தை உருவாக்கி அந்தியூர், பவானி போன்ற ஈரோடு மாவட்டங்களின் வறண்ட பகுதிகளை வளப்படுத்த முடியும்.
இதுபோன்ற பல்வேறு திட்டங்கள், பல ஆண்டுகளாக பேசப்பட்டாலும் துவங்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. மேட்டூர் அணையின் உபரி நீரை, வசிஷ்ட நதி வரை கொண்டு செல்கின்ற திட்டமும், பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றினால், சேலம் மாவட்டத்தின் ஆத்துார் போன்ற பகுதிகளையும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பகுதிகளையும், கடலுார் மாவட்டத்தின் சில பகுதிகளையும் செழிப்பாக்கி விட முடியும். மேட்டூர் அணை என்பது தமிழகத்துக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்.
மேட்டூர் அணையின் நீர் மேலாண் மூலம் தண்ணீரை கொண்டு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை வளப்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஒருமுறை உபரி நீரை கொண்டு குளங்கள் நிரப்பினால், இரண்டு ஆண்டுகள் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது.
தமிழக அரசு, நீர்வளத்துறை நிபுணர்களை கொண்டு, ஒரு குழுவை அமைத்து, இருக்கின்ற வாய்ப்புகளை ஆராய வேண்டும். அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றியது போல், மேட்டூர் அணையின் உபரிநீரை பயன்படுத்துகின்ற திட்டங்களை உடனே துவங்க அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!