நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்

செய்யூர்:செய்யூர்-- - போளூர் மாநில நெடுஞ்சாலையில் கட்டுப்பாடுகள் இன்றி கால்நடைகள் உலா வருவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம், பனையூர், நயினார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை முறையாக பராமரிக்காததால், செய்யூர்-போளூர் சாலையில் கட்டுப்பாடுகள் இன்றி சுற்றித்திரிகின்றன.

சாலையில் தினசரி இருசக்கர வாகனங்கள், கார், பேருந்து என ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், சாலை நடுவே வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் உலா வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் கால்நடைகள் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது.

சாலைகளில் பராமரிப்பின்றி சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பலமுறை அறிவித்துள்ள நிலையில், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே, பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்தி, அதன் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement