கஞ்சா கொள்முதலுக்கு ஒடிசா சென்ற வாலிபர்...கொலை:பணம் கேட்டு மிரட்டிய கும்பல் வெறிச்செயல்

திருவள்ளூர், ஜூலை 6- சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிசா மாநிலம் சென்ற, திருவள்ளூர் மாவட்ட வாலிபரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள், புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹரி - ஜோதி தம்பதி மகன் அஜய், 22. ஆவடியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிப்பை பாதியில் நிறுத்தியதாக கூறப்படுகிறது.
கடந்த 27ம் தேதி நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வதாக கூறிச் சென்றார். கடந்த 1ம் தேதி இரவு, மொபைல் போனில் பெற்றோரை தொடர்பு கொண்ட அஜய், 'ஒடிசாவிற்கு வந்த என்னை, சிலர் பிடித்து வைத்து, ஐந்து லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்' என, தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவரது பெற்றோர், திருவள்ளூர் எஸ்.பி., அலுவலகம் மற்றும் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிந்து, போலீசார் விசாரித்து வந்த நிலையில், ஒடிசா மாநிலம், பாரபுல்லா ரயில் நிலையம் அருகே, ரத்த காயங்களுடன் அஜய் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதையறிந்த அஜயின் உறவினர்கள், புல்லரம்பாக்கம் காவல் நிலையம் அருகே நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'நாங்கள் புகார் கொடுத்த உடனேயே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், அஜயை காப்பாற்றி இருக்கலாம்' என போர்க்கொடி உயர்த்தினர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, அஜயின் உடலை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்தவர் அபினேஷ்; சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கும், அஜய்க்கும் கஞ்சா விற்பனையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அஜயை தொடர்பு கொண்ட அபினேஷ், 'ஒடிசாவில் குறைந்த விலையில் கஞ்சா கிடைக்கும். அதை வாங்கி, சென்னையில் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம்' எனக் கூறி, ஒடிசாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இருவரும், ஒடிசாவில் 3 கிலோ கஞ்சாவை ஒரு குழுவிடம் இருந்து வாங்கி, பாரபுல்லா ரயில் நிலையத்திற்கு, தண்டவாளத்தில் நடந்து வந்தனர்.
அப்போது, ஒடிசாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், அவர்களை பிடிக்க முயன்றபோது, அபினேஷ் தப்பிவிட்டார். அஜய் மட்டும் சிக்கிக்கொண்டார்.
அவரை பணயமாக வைத்த மர்ம கும்பல், அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், அஜயின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்ற தகவல் அறிந்ததும், அந்த கும்பல், அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. ஏனெனில், அவரது உடலில் பலத்த காயங்கள் இருந்தன.
அஜயின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளதால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை அதிகம் நடந்து வருகிறது.
அதை தடுக்க முடியாமல் போலீசார் தவித்து வந்தாலும், 'கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தி விட்டோம்' என, காவல் துறையினர் தம்பட்டம் அடித்து வருகின்றனர்.
அதனால் கஞ்சாவை பயன்படுத்துவோர், அதீத போதையில், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களில், தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்திற்கு கஞ்சா கொள்முதல் செய்வதற்காக சென்ற திருவள்ளூர் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது, பலதரப்பினரிடமும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
@block_B@
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா போதையில் அடிக்கடி கொலை சம்பவம் நடக்கிறது. கடந்த ஜூன் மாதம் கஞ்சா விற்பனை தகராறில் முகேஷ், 22, என்பவர் நாட்டு வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ஊத்துக்கோட்டை அடுத்த கச்சூர் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன், 19, ஆகாஷ், 18, ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை குறித்து தகவல் சொல்லியதால், அதே மாதம் படுகொலை செய்யப்பட்டனர். அவ்வப்போது, கஞ்சா போதையில் இளைஞர்கள் மோதிக் கொள்ளும் சம்பவமும் அதிகரித்து வருவதால், மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.block_B
@block_B@
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து, அதிகளவில் கஞ்சா தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணியரை போல் கஞ்சா கடத்தி வந்து, திருவள்ளூர் மாவட்டம் வழியாக, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். கஞ்சா போதையில் வாலிபர்கள் தடம் மாறி, பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.block_B
மேலும்
-
14 மருத்துவ கல்லுாரிகளின் 'டீன்'கள் நியமனத்தை தனி நீதிபதி ரத்து செய்தது சரியே: ஐகோர்ட் தீர்ப்பு
-
தலாய் லாமாவுக்கு 90வது பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து
-
நாமக்கல் தம்பதி விபரீத முடிவு; போலீசார் விசாரணை
-
டெக்சாஸில் வெள்ளம்: 15 குழந்தைகள் உட்பட 43 பேர் பலி; 27 பெண்கள் மாயம்
-
ஆந்திராவில் கைதான தமிழக பயங்கரவாதிக்கு ஜாஹிர் நாயக் உடன் நேரடி தொடர்பு
-
பிரேசில் நாட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!