உத்திரமேரூரில் ரூ.10 லட்சத்தில் கூடுதல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் பேரூராட்சியில், 10 லட்சம் ரூபாயில், கூடுதல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில், 40,000 மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள, வேடப்பாளையம், நல்லுார், நல்லதண்ணீர் குளம், சோமநாதபுரம் ஆகிய இடங்களில், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன.இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, அப்பகுதிவாசிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கேதாரீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் உள்ளது.

இதனால், அப்பகுதிவாசிகள் நீண்ட துாரம் சென்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எடுத்து வர வேண்டிய சூழல் உள்ளது.

எனவே, அப்பகுதி மக்கள் கேதாரீஸ்வரன் கோவில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், 15வது நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டரும் விடப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து, புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement