மருமகளுக்கு கொலை மிரட்டல் மாமியார் உட்பட 3 பேர் மீது வழக்கு

புதுச்சேரி: சென்னையில் மருமகள் வசித்த வீட்டின் பொருட்களை சாலை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டிய மாமனார், மாமியார் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, வாழைக்குளம், குபேர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி, 28. இவருக்கும், இளங்கோ நகரை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின், அவரது கணவர் 5 கோடி ரூபாய் ரொக்கம், ஈஸ்வரியின் பெற்றோர் வீட்டை எழுதி கொடுக்கும்படி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு சென்னை, கோரட்டூரில் கணவருடன் தனி குடித்தனம் சென்றுள்ளார். அப்போதும், பிரதீப்குமார் வரதட்ணை கேட்டும், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுவந்தார். இதனால், கோபமடைந்த ஈஸ்வரி கணவரை பிரிந்து, வாழைக்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 28 ம் தேதி சென்னையில் வசித்து வந்த வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்களை, ஈஸ்வரியின் மாமனார் செந்தில்முருகன், மாமியார் லதா, அவரது நண்பர்களான கோட்டக்குப்பத்தை முகமது உள்ளிட்ட சிலர், புதுச்சேரி எடுத்து வந்து ஈஸ்வரியின் பெற்றோர் வீட்டின் வாசலில் வீசிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் செந்தில்முருகன், லதா, முகமது மற்றும் சிலர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement