லிங்காபுரத்தில் புது கல் குவாரிக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வாலாஜாபாத்:லிங்காபுரத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சிக்கு உட்பட்டது லிங்காபுரம் கிராமம். இப்பகுதியில், விவசாய நிலங்களுக்கு மத்தியில் 5 ஏக்கர் பரப்பிலான நிலங்களை தனியார் நிறுவனம் விலைக்கு பெற்றுள்ளது.

அந்நிலத்தில் தற்போது கல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய கல் குவாரி இயக்கத்தால் விவசாயம், நிலத்தடி நீர் ஆதாரம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என, அப்பகுதி மக்கள் புது கல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, லிங்காபுரம் கிராம மக்கள் கூறியதாவது:

லிங்காபுரத்தில் ஏற்கனவே தனியார் கல் குவாரி இயக்கப்பட்டு அதற்கான கால அவகாசம் முடிவுற்றது. காலாவதியான அந்த பழைய கல் குவாரி இயக்கத்தின் போதே சுற்றுச்சூழல் மாசு, கனரக வாகனங்களால் சாலைகள் சேதம், விவசாய கிணறுகள் நீர்மட்டம் குறைவு போன்ற பல பிரச்னைகளை சந்தித்தோம்.

தற்போது புதிய கல் குவாரிக்கு அனுமதி அளித்து செயல்பட துவங்கினால் மேலும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, லிங்காபுரத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காமல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement