சஸ்பெண்ட் ஆகி திறந்த ஆலைகளில் ஆய்வு: குறிப்பிட்ட இடைவெளியில் கண்காணிப்பதும் .. அவசியம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக இரண்டு பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்கள் பலியாகி உள்ளன. சிவகாசி சின்னக்காமன்பட்டி கோகுலேஸ் பட்டாசு ஆலை, வெம்பக்கோட்டை கீழதாயில்பட்டி ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலைகள் நாக்பூர் உரிமம் பெற்றவை.

இந்த இரு ஆலைகளும் 6 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது பட்டாசு தயாரிப்பதற்கான விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் இந்த இரு ஆலைகளின் உரிமமும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னும் இரு பட்டாசு ஆலைகளும் உரிய பட்டாசு விதிமுறைகளை பின்பற்றுவதாக கூறி உரிமத்தை புதுப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த இரு பட்டாசு ஆலைகளிலும் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டு 11 உயிர்கள் பலியாகி உள்ளன. இதற்கு பட்டாசு விதிமீறல் தான் காரணம் என தெரிய வருகிறது.

நாக்பூர் உரிமம் பெற்ற ஆலைகளில் 30க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கும். பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படும். பேன்சி ரக பட்டாசுகளை தயாரிப்பதற்கு அதிகப்படியான சம்பளத்தில் கெமிக்கல் மேற்பார்வையாளர், மேலாளர், போர்மேன் ஆகியோரை நியமனம் செய்து மருந்து கலவையை தயாரிக்க வேண்டும்.

மேலும் ஆலையில் முறையான பயிற்சி பெற்ற போர்மேன்களே மணி மருந்து கலவை செய்து பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் மூலம் பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. மேலும் ஒரு அறையில் நான்கு பேர் மட்டுமே பணி புரிய வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி 10 பேர் வரை பணி அமர்த்தப்படுகின்றனர். பல பட்டாசு ஆலைகளில் மரத்தடியில் உட்கார்ந்தும் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிலை உள்ளது.

ஆலையில் அறைகளை குத்தகைக்கு விடுவதால் குத்தகைக்கு எடுத்தவர் லாபம் பார்ப்பதற்காக பயிற்சி பெறாத தொழிலாளர்களையும் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்தி விபத்துக்கு வழி வகுத்து விடுகின்றனர்.

விலைமதிப்பில்லாத மனித உயிர்கள் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறப்பதை தடுக்க உரிமம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டால் அந்த ஆலைகளை குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் தொடர்ந்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement