சாதனை நாயகன் ஆகாஷ் தீப்

பர்மிங்ஹாம்: பர்மிங்ஹாம் டெஸ்டில் 10 விக்கெட் சாய்த்த ஆகாஷ் தீப், புதிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார். சோதனைகளை கடந்து சாதனை நாயகனாக உருவெடுத்துள்ளார்.
பீஹாரின் சசாரமில் உள்ள டெஹரி கிராமத்தை சேர்ந்தவர் ஆகாஷ் தீப் 28. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்தார். இவரது 16வது வயதில் தந்தை காலமானார். அடுத்த 6 மாதத்தில் மூத்த சகோதரர் மரணம் அடைந்தார். இந்த இரட்டை சோகத்தில் 3 ஆண்டுகளுக்கு கிரிக்கெட்டை புறக்கணித்தார். பின் தாய், சகோதரி தந்த ஊக்கத்தில், கிரிக்கெட் கனவை தொடர்ந்தார்.
ரூ. 8 கோடி ஒப்பந்தம்: மேற்கு வங்கம் சென்று உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றார். மாதம் ரூ. 20,000 சம்பாதித்து குடும்பத்திற்கு உதவினார். தொடர்ந்து பெங்கால் அணிக்காக அசத்த, 2021ல் பிரிமியர் தொடரில் பெங்களூரு அணியில் 'நெட் பவுலராக' சேர்க்கப்பட்டார். 2022ல் பெங்களூரு அணி ரூ. 20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்தது. 2025ல் இவரது மதிப்பு பன்மடங்காக உயர்ந்தது. லக்னோ அணி இவரை ரூ. 8 கோடிக்கு வாங்கியது.
அக்காவுக்கு சமர்ப்பணம்: இந்திய அணியில் இடம் பிடித்த இவருக்கு பர்மிங்ஹாம் டெஸ்ட் திருப்புமுனையாக அமைந்தது. அசுர வேகத்தில் பந்துவீசிய இவர், இங்கிலாந்தின் அனுபவ பேட்டரான ஜோ ரூட்டை போல்டாக்கி, உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இரு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் (4+6) சாய்த்த இவர், இந்தியாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தேடித் தந்தார்.
ஆகாஷ் தீப் கூறுகையில்,''எனது அக்கா அகாந்த் ஜோதி சிங் குடல் பகுதி 'கேன்சரால்' அவதிப்படுகிறார். ஒவ்வொரு முறை பந்தை கையில் எடுக்கும் போது அவரது நினைவு தான் மனதில் தோன்றும். இப்போது நலமாக உள்ளார். எனது பந்துவீச்சை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார். எனது சிறந்த செயல்பாட்டை, வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். அவரது முகத்தில் புன்னகையை பார்க்க ஆசைப்படுகிறேன்,''என்றார்.
அன்பான தம்பி: ஆகாஷ் அக்கா ஜோதி கூறுகையில்,''ஆகாஷ் 10 விக்கெட் வீழ்த்தி, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இங்கிலாந்து புறப்படும் முன் 'என்னை பற்றி கவலைப்படாதே; நலமாக இருக்கிறேன்' என சொல்லி வழிஅனுப்பி வைத்தேன். எனது உடல்நிலை பற்றி ஆகாஷ் வெளிப்படையாக சொல்வார் என எதிர்பார்க்கவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில், எனக்காக வெற்றியை சமர்ப்பித்துள்ளார். இது என் மீது அவர் வைத்துள்ள அன்பை எடுத்துக் காட்டுகிறது. போட்டி முடிந்ததும் அதிகாலை 5 மணிக்கு 'வீடியோ' அழைப்பு மூலம் பேசினார். 'எதற்கும் கவலைப்படாதே; இந்திய தேசமே நமக்கு ஆதரவாக உள்ளது,' என்றார். இவரை போன்ற தம்பி கிடைப்பது அரிது,''என்றார்.
மேலும்
-
பறிமுதல் நகையை 'அபேஸ்' செய்தால் சஸ்பெண்ட்: போலீசாருக்கு எச்சரிக்கை
-
'போலீஸ்கிட்டயா போட்டு தர்றீங்க' வீடு புகுந்து தந்தை, மகனுக்கு வெட்டு
-
பா.ஜ., ஆர்ப்பாட்டத்தில் கூட்டம் குறைவு; மாவட்ட தலைவர்கள் தடுமாற்றம்
-
தி.மு.க., கூட்டணி 100 தொகுதிகளில் 'வீக்'; 'உடன்பிறப்பே வா' துவங்கிய பின்னணி
-
அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி
-
ராமதாஸ் தலைமையில் பா.ம.க., செயற்குழு; நிர்வாகிகளை தடுப்பதில் அன்புமணி தீவிரம்