அ.தி.மு.க., ஓட்டுகளை குறிவைக்கும் விஜய்; விமர்சனத்தை தவிர்ப்பதன் பின்னணி

சென்னை: அ.தி.மு.க., ஓட்டுகளை குறி வைப்பதால், அக்கட்சியை விமர்சிப்பதை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தவிர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள விஜய், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.
கட்சி துவங்கியது முதல், பா.ஜ., மற்றும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து வரும் அவர், எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மீதான விமர்சனங்களை தவிர்த்து வருகிறார்.
கடந்த 4ம் தேதி நடந்த த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், 'தி.மு.க., - பா.ஜ.,வுடன்
கூட்டணி இல்லை' என அறிவித்தார்.
சமரசம் இல்லை
பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்த அவர், 'மலிவான அரசியல் ஆதாயத்திற்காக, மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, வேற்றுமையை விதைத்து, அதில் குளிர்காய பா.ஜ., நினைக்கிறது.
'பா.ஜ.,வின் இந்த விஷமத்தனமான வேலைகள், தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. கொள்கை எதிரிகள், பிளவுவாத சக்திகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்றார்.
ஆனால், பா.ஜ., வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.,வை அவர் கொஞ்சமும் விமர்சிக்கவில்லை.
இது, பல்வேறு கருத்து களுக்கு வழி வகுத்துள்ளது. அ.தி.மு.க.,வில் உள்ள பா.ஜ., எதிர்ப்பாளர்கள், 'பா.ஜ.,வை கொள்கை எதிரி; பிளவுவாத சக்தி என்றவர், அ.தி.மு.க.,வை எதுவும் கூறவில்லை. பா.ஜ., கூட்டணியை முறித்துக் கொண்டால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணிக்கு தயார் என்பதை தான் விஜயின் பேச்சு காட்டுகிறது.
ஒப்பீடு
'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ரசிகர்களாகவும் விசுவாசிகளாகவும் இருக்கும் பலரும், விஜய்க்கு ஓட்டு போட வாய்ப்பு உள்ளது.இந்த விபரங்களை நன்கு அறிந்து வைத்திருக்கும் விஜயும் தற்போது அ.தி.மு.க.,வினர் ஓட்டுகளை குறி வைக்கிறார்.
'அதனாலேயே, த.வெ.க.,வினர் விஜயை, எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர்' என கூறப்படுகிறது.