'மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்' அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் வலியுறுத்தல்

ஆத்துார் : தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 3.16 சதவீத மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. வீட்டு இணைப்புகள், சிறுதொழில்கள் ஆகியவற்றுக்கான கட்டண உயர்வை மட்டும் அரசே செலுத்திவிடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலர் பரணிதரன் கூறியதாவது:

கடந்த 2022 முதல் தற்போது வரை, தொடர்ந்து பலமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1 முதல், 3.16 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். 2022க்கு பின், நிலைக்கட்டணம், 135 ரூபாய், யூனிட், 8.50 ரூபாய் என உள்ளது. நிலைக்கட்டணம், 100 ரூபாய் அதிகரித்துள்ளது.

சோலார் மின்சாரத்திற்கு, சர்வீஸ் கட்டணம் இல்லை என, மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மாநில அரசு, சர்வீஸ் கட்டணம் வசூலிக்கிறது. தவிர, 15 சதவீதம் சொத்து வரி உயர்ந்துள்ளது. நெல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் நிதிச்சுமை அதிகரித்துள்ளது.

இந்நிலை நீடித்தால், வருங்காலத்தில் அரிசி உற்பத்தி செய்ய இயலாதபடி கடுமையான சூழல் ஏற்படும்.

இவ்வாறு கூறினார்.

Advertisement