ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சல் சத்தீஸ்கரில் கைது

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், குண்டு வைத்து ஏ.எஸ்.பி.,யை கொன்ற சம்பவம் தொடர்பாக நக்சல் அமைப்பை சேர்ந்த ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஜூன் 9ம் தேதி, சுக்மாவின் கோண்டா பகுதியில் உள்ள ஒரு கல் குவாரியில் நக்சலைட்டுகளால் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் ஏ.எஸ்.பி., (கோண்டா பிரிவு) ஆகாஷ் ராவ் கிரிபுஞ்சே கொல்லப்பட்டார். மேலும் அதிகாரிகள் காயமடைந்தனர்.
2011ம் ஆண்டு முதல் சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பினரால் கொல்லப்பட்ட மிக உயர்ந்த மாநில காவல்துறை அதிகாரி இவர்தான்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு, ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சலைட் சுக்மா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டான்.
குற்றம் சாட்டப்பட்ட சோதி கங்காவை மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்.ஐ.ஏ.,) கைது செய்தது.
கைது குறித்து போலீஸ் உயர் அதிகாரி கூறியதாவது:
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதான முதல் நபர் சோதி கங்கா தான். இந்த வழக்கு எங்களிடம் ஒப்படைக்கப் பட்டதை தொடர்ந்து, கங்கா மீது கவனம் செலுத்தினோம். அவன் சுக்மா மாவட்டத்தின் பெஜ்ஜி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நில்மட்கு கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் அந்த பகுதியில் நக்சல்களுக்கான தலைவராக தீவிரமாக செயல்பட்டது தெரிந்தது. அவனும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக ஒப்புக்கொண்டான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரது பெயர்களையும் கூறியுள்ளான். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.